×

அமைச்சர் மீது ரூ.2500 கோடி முறைகேடு புகார் கர்நாடக பேரவையில் எதிர்கட்சிகள் அமளி: அவை ஒத்தி வைப்பு

பெங்களூரு: கலால் துறை அமைச்சர் திம்மாபுரா ரூ.2500 கோடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதால் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளின் போராட்டத்தினால் கர்நாடக பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. பெங்களூரு விதான சவுதாவில் சிறப்பு பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. 2வது நாளான நேற்று அவை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:

அமைச்சர் திம்மாபுரா மீது லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண புகார் கிடையாது. ரூ.2500 கோடி முறைகேடாகும். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஆடியோ வைரலாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டும் என்றும் ஒரு புதிய மது விற்பனை உரிமம் வழங்குவதற்கு ரூ.2.5 கோடி என வசூலிக்கப்பட்டுள்ளது. இது பொய் கிடையாது.

இதற்கான ஆதாரம் இந்த பென்டிரைவில் இருக்கிறது (பென்டிரைவை காண்பித்தார்) எனவே ஒரு நிமிடம் கூட அமைச்சர் பதவியில் திம்மாபுரா நீடிக்கக்கூடாது. முதல்வர் சித்தராமையா அவரின் பதவியை பறிக்க வேண்டும். அதன் பிறகு எந்த விசாரணை நடத்தினாலும் அதை ஏற்கிறோம் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து அமைச்சர் திம்மாபுரா பதவி விலக வேண்டும் என் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சரத் பச்சே கவுடா, அமைச்சர்கள் தினேஷ்குண்டுராவ், ராமலிங்கரெட்டி , பிரியாங்க் கார்கே பதில் கூறியதை ஏற்காமல் பாஜ உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சபாநாயகர் யுடி காதர் அவையை 15 நிமிடம் ஒத்தி வைத்தார்.

Tags : Karnataka Assembly ,House ,Bengaluru ,Minister ,Thimmapura ,Assembly ,Vidhana Soudha ,
× RELATED பலரும் கோரியுள்ளதால் ஆய்வு...