×

ராஜஸ்தான் சிறையில் காதல் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணம்: 15 நாள் பரோலில் விடுதலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 2018ம் ஆண்டு ‘டேட்டிங்’ செயலி மூலம் பழகி துஷ்யந்த் சர்மா(27) என்பவரைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசிய வழக்கில் பிரியா சேத் (34) என்பவரும், அல்வார் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கில் அனுமார் பிரசாத் (29) என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்குகளில் இவர்கள் இருவருக்கும் 2023ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். சங்கனேரில் உள்ள திறந்தவெளிச் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இந்நிலையில் சிறையில் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதற்காக பரோல் கேட்டு விண்ணப்பித்த நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஜன.7ஆம் தேதி பரோலை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி இருவருக்கும் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. கடந்த புதன்கிழமை சிறையிலிருந்து வெளியே வந்த இந்த ஜோடிக்கு, அனுமார் பிரசாத் சொந்த ஊரான ஆல்வார் மாவட்டம் பரோடாமியோவில் நேற்று திருமணம் நடைபெற்றது.

என்ன வழக்கு?: 2018 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் துஷ்யந்த் சர்மா கொலைக்கு பிரியா சேத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். துஷ்யந்த் சர்மா உடல் ஜெய்ப்பூர் புறநகரில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரை டேட்டிங் செயலி மூலம் சந்தித்ததாகவும், பஜாஜ் நகரில் உள்ள அவரது வாடகை குடியிருப்பில் அவரை சிறைபிடித்து வைத்து, அவரைக் கொன்று, பின்னர் உடலை அப்புறப்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

2023 ஆம் ஆண்டு பிரியாசேத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அனுமார் பிரசாத், 2017 ஆம் ஆண்டு ஆல்வாரில் ஒரு நபர், அவரது மூன்று மகன்கள் மற்றும் ஒரு மருமகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியுடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்து போதை மருந்து கொடுத்து அவரது முழு குடும்பத்தையும் கொலை செய்த வழக்கில் அனுமார் பிரசாத் ஆயுள் தண்டனை பெற்றார்.

Tags : Rajasthan ,Jaipur ,Priya Seth ,Dushyant Sharma ,Jaipur, Rajasthan ,Alwar ,
× RELATED பலரும் கோரியுள்ளதால் ஆய்வு...