திருவனந்தபுரம்: குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு சொந்தமாக ரூ. 1601 கோடி மதிப்புள்ள தங்கமும், 6335 கிலோ வெள்ளியும் இருப்பு உள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் பாலக்காட்டை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவர் குருவாயூர் கோயிலுக்கு இதுவரை கிடைத்த தங்கம், வெள்ளி மற்றும் பொருட்கள் குறித்த விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதற்கு குருவாயூர் தேவசம் போர்டு மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி ஷாஜு சங்கர் பதில் அளித்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: குருவாயூர் கோயிலுக்கு சொந்தமாக 1119.16 கிலோ தங்கமும், 6335 கிலோ வெள்ளியும், 215.75 கிலோ செம்பு நாணயங்களும் உள்ளன. தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூ. 1601 கோடியாகும். இதில் 869 கிலோ தங்க முதலீடு திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
