×

ராகுல் மீது அதிருப்தி எதிரொலி காங். உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை எம்பி சசிதரூர் புறக்கணித்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியான சசிதரூர் பஹல்காமில் நடந்த தீவிராத தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் ராஜதந்திர அணுகுமுறை குறித்த பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில் தெரிவித்த கருத்துக்களால் சர்ச்சை வெடித்தது.

சமீப மாதங்களில் சசிதரூரின் அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளும் தேசிய மற்றும் மாநில அளவிலான காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை பெற்றன. இந்நிலையில் கொச்சியில் கடந்த 19ம் தேதி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்பியான ராகுல்காந்தி மேடையில் இருந்த மற்ற மூத்த தலைவர்களை அங்கீகரித்து அவர்களது பெயர்களை குறிப்பிட்டார். ஆனால் நான்கு முறை எம்பியும், மாநிலத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூரின் பெயரை ராகுல் குறிப்பிடவில்லை. இதன் காரணமாக சசிதரூர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கேரள சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் குறித்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எம்பி ராகுல்காந்தி மற்றும் கேரள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை கேரளாவை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் எம்பியான சசி தரூர் புறக்கணித்துள்ளார்.

ஆனால் கோழிக்கோட்டில் நடைபெறும் கேரள இலக்கிய விழாவில் ஏற்கனவே இருந்த நிகழ்ச்சிகள் காரணமாக கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என்று சசிதரூர் கட்சிக்கு தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Tags : Congress ,Shashi Tharoor ,Rahul Gandhi ,New Delhi ,Thiruvananthapuram, Kerala ,Pahalgam ,India-Pakistan ,
× RELATED பலரும் கோரியுள்ளதால் ஆய்வு...