×

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ‘ஏஐ ரோபோ போலீஸ்’ அறிமுகம்: இந்தி, தெலுங்கு, ஆங்கிலத்தில் சரளமாக பேசும்

திருமலை: இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘ஏஎஸ்சி அர்ஜூன்’ என்ற மனித உருவ ரோபோ முதல் முறையாக விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை ரயில்வே இதை அறிமுகப்படுத்தியது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துதல், சிறந்த சேவைகளை வழங்குதல், நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தூய்மையைக் கண்காணித்தல் போன்ற பணிகளை ரோபோ செய்யும். இந்த ரோபோ முற்றிலும் விசாகப்பட்டினத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. ஒரு வருடம் முயற்சிக்கு பிறகு, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக ரோபோ, தொடர்ந்து ரயில் நிலையத்தை கண்காணித்து சந்தேக நபர்களை அடையாளம் காணும். அடிக்கடி திருட்டில் ஈடுபடுபவர்களை புகைப்படம் எடுத்து பகுப்பாய்வு செய்து, நெரிசல் அதிகரித்தால் பயணிகளை எச்சரிக்கும். ஏ.ஐ. மூலம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இந்த ரோபோ மிகவும் உதவுகிறது.

மேலும், பாதுகாப்புப் பணியாளர்கள் தேவைப்படும் பகுதிகளுக்கு ரோபோ அனுப்பப்படும். இந்த ரோபோ இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மொழிகளில் சரளமாகப் பேசும். அதோடு ரயில் நிலையத்தில் உள்ள தீ மற்றும் புகையைக் கண்டறிந்து பயணிகளை எச்சரிக்கும்.

இது ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் தங்கி இங்கு வருபவர்களின் புகைப்படங்களை எடுக்கும். கூடுதலாக, சந்தேக நபர்களையும் ரயில் நிலையத்திற்கு அடிக்கடி வருபவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை அதிகாரிகளுக்கு அனுப்பும். விசாகப்பட்டினத்தில் பிறந்ததாகவும், தான் ரோபோ கப்ளர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாக ரோபோ கூறியது.

Tags : AI Robot Police ,Visakhapatnam railway ,Tirumala ,Indian Railways ,ASC ,Visakhapatnam railway station ,East Coast Railway ,
× RELATED பலரும் கோரியுள்ளதால் ஆய்வு...