கவுஹாத்தி: அசாமின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள மிகிர்பேட்டா பகுதியில் வசித்து வருபவர் பரிதுத் யூனுஸ். இவரது குடும்பத்தில் 6 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களில் மூன்று பேர் முகவரியில் இருந்து இடம்மாறிவிட்டதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த யூனுஸ் மற்றும் அவரது சகோதர, சகோதரிகள் தாங்கள் இன்னும் மிகிர்பேட்டா பகுதியில் வசித்து வருவதாக நிரூபிப்பதற்கான ஆவணங்களுடன் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் ஆணைய அதிகாரிகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளனர். யூனுஸ் மற்றும் அவரது சகோதர, சகோதரிகளை போலவே மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் படிவம் 7ன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் அறிவிப்புக்களை பெற்றுள்ளனர்.
இந்த படிவம் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை சேர்ப்பது அல்லது நீக்குவதற்கு பயன்படுத்தப்படுவதாகும். பலர் நேரில் விசாரணைக்கு ஆஜரானபோதிலும் பட்டியலில் இறந்தவர்கள் என குறிக்கப்பட்டதாக காட்டும் அறிவிப்புக்களை பெற்றதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
