×

கேரளாவில் பாஜ ஆட்சிக்கு வந்தால் சபரிமலையில் தங்கம் திருடியவர்களை சிறையில் அடைப்போம்: திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி பேச்சு

திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜ ஆட்சிக்கு வந்தால் சபரிமலையில் தங்கம் திருடியவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என்று திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி நேற்று திருவனந்தபுரம் வந்தார்.

காலை 10.25 மணிக்கு திருவனந்தபுரம் வந்தவருக்கு விமான நிலையத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதானம் புறப்பட்டார். வழியில் சுமார் 1 கிமீ தொலைவுக்கு மோடி ரோட் ஷோ நடத்தினார். புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடந்த பாஜ கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கேரளாவில் இடது முன்னணியும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சி செய்து மாநிலத்தின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளி விட்டது. இந்த 2 முன்னணியினரும் தங்களுக்குள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை துன்புறுத்த மாட்டோம். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களை துன்புறுத்தக் கூடாது என்று ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளனர்.  வரும் தேர்தலில் கேரளாவில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்.

மாற்றம் ஏற்படும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜ வெற்றி பெற்றது இதற்கு அறிகுறியாகும். 1987க்கு முன்னர் குஜராத்தில் பாஜவுக்கு தோல்வி மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் அகமதாபாத் நகரசபையில் பாஜவுக்கு முதல் வெற்றி கிடைத்தது.

அதன் பிறகு ஆட்சியைப் பிடித்தோம். அதேபோல் கேரளாவிலும் பாஜ ஆட்சியமைக்கும். சபரிமலை ஐயப்பனை கூட இங்குள்ள ஆட்சியாளர்கள் விட்டு வைக்கவில்லை. பாஜ ஆட்சிக்கு வந்தால் சபரிமலை தங்கத்தை திருடியவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

* 3 அம்ரித் பாரத் ரயில்கள்
புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரம்- தாம்பரம், நாகர்கோவில்- மங்களூரு, திருவனந்தபுரம்- ஐதராபாத் ஆகிய 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் திருச்சூர்-குருவாயூர் பயணிகள் ரயில் ஆகிய 4 புதிய ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.மேலும் புதுமை தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.அதன்பிறகு திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 3 மாவட்ட பாஜ நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

Tags : BJP ,Kerala ,Sabarimala ,PM Modi ,Thiruvananthapuram ,Modi ,
× RELATED பலரும் கோரியுள்ளதால் ஆய்வு...