×

பாடாலூர் அருகே பைக்குகள் மோதி விவசாயி பரிதாப பலி

பாடாலூர், ஜன.23: பாடாலூர் அருகே நேருக்கு நேராக பைக்குகள் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக பலியானார். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சைமலையை சேர்ந்தவர் ராஜ் மகன் சிவமூர்த்தி(30) விவசாயி. இவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 16-ம் தேதி மாலை பைக்கில் நாட்டார்மங்கலம் வயலுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நாட்டார்மங்கலத்தை சேர்ந்த தங்கராசு மனைவி செல்வி (42), அவரது தங்கை மகள் சங்கீதா (15) ஆகியோர் பைக்கில் செல்லியம்மன் கோவில் அருகே தங்களது விவசாய நிலத்தில் உள்ள காட்டு கொட்டகையில் மாட்டு பொங்கல் கொண்டாடி விட்டு வந்து கொண்டிருந்தனர். இருவரது பைக்குகளும் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவமூர்த்தி, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவமூர்த்தி உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சங்கீதா பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags : Patalur ,Raj ,Sivamoorthy ,Pachaimalai ,Thuraiyur ,Trichy district ,Nattarmangalam ,Alathur taluk ,Perambalur district ,
× RELATED தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்