திருப்பூர், ஜன. 23: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யும் வகையில் பல்வேறு பகுதிகளில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட 4வது வார்டு நெருப்பெரிச்சல் கல்லாங்குத்து பகுதியில், குப்பைகளை வகைப்படுத்தி தரம் பிரிப்பதற்காக டிரம்மல் இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் குப்பைகளை விரைவாக தரம் பிரிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது இளநிலை பொறியாளர் ரமேஷ்குமார், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
