ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு போளூர் தொகுதி உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) பேசியதாவது: பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்களை வைப்பதிலும், பெயர் மாற்றுவதிலும்தான் இந்த அரசு கைதேர்ந்ததாக உள்ளது. முதல்வரின் குறைதீர்க்கும் பிரிவு என்பது முதல்வரின் முகவரி என்றும், மனுநீதி முகாம் என்பதை உங்களுடன் ஸ்டாலின் என்றும் மாற்றி புதிய திட்டம்போல் கூறியுள்ளீர்கள்.
ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கான அடிப்படை வசதி திட்டத்தை அயோத்திதாசர் பண்டிதர் கிராம மேம்பாட்டு திட்டம் என்றும், பள்ளி அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டத்தை பேராசிரியர் அன்பழகன் திட்டம் என்றும் மாற்றியிருக்கிறீர்கள். ஆனால் பல திட்டத்தின் பெயர்களே விளங்கவில்லை. நான் முதல்வன், நிமிர்ந்து நில் என்றெல்லாம் பெயர்கள் உள்ளன.
அமைச்சர் சிவசங்கர்: இப்போது நீங்கள் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறீர்களே, என்ன கூத்து அது? எங்கள் முதல்வர் கொண்டு வந்துள்ள திட்டங்களைத் தான் கூறியிருக்கிறீர்கள். முதலில் உங்கள் முதுகை திரும்பி பாருங்கள்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி: எடப்பாடி பழனிசாமி 2021ம் ஆண்டின் தேர்தல் வாக்குறுதியிலேயே மகளிர் உதவித் தொகையாக ரூ.1,500 தருவேன் என்று கூறினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அதே எதிர்க்கட்சித் தலைவர்தான் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஆயிரம் ரூபாய் தருவது சாத்தியமற்றது என்றும் கூறினார்.
அமைச்சர் ரகுபதி: 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னால், வறுமை கோர்ட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் தருவோம் என்று அவர்கள் கூறினார்கள். அதற்காக விழா எடுத்து 32 பேருக்கு ரூ.64 ஆயிரம் கொடுத்தார்கள். அதன் பிறகு அந்த திட்டத்தையே நிறுத்திவிட்டனர். அன்றே ரூ.2 ஆயிரம் தராதவர்கள் இன்று எதை சாதிக்க போகிறார்கள்?
அக்ரி கிருஷ்ணமூர்த்தி: 2026ம் ஆண்டில் அவர் முதல்வராக அமரும்போது தனது நிர்வாகத் திறமையினால் அந்த திட்டங்களை நிறைவேற்றுவார். 2025ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று தமிழகம் முதலிடம் பெற்றதாக கூறினீர்கள். ஆனால் விவசாயத்துறையில் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை கூறவில்லை. உங்களுக்கு சாதகமாக உள்ளதை பெருமையாக எடுத்தும், பாதகமாக இருப்பதை மறைத்தும் விடுகிறீர்கள். வேலை வாய்ப்புகள் அளித்தது பற்றி கவர்னர் உரையில் கூறவில்லை.
உங்கள் ஆட்சியில் மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. எங்கள் ஆட்சியில் போடப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களை தான் செய்கிறீர்கள். பணியை முடித்து திட்டங்களை தொடங்கவில்லை. நிதிசார் தொழில்நுட்ப நகர திட்டத்தை வண்டலூர் அருகே செயல்படுத்த திட்டமிட்டிருந்தோம். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றிருப்பார்கள். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதை சுருக்கி, நிதிசார் தொழில்நுட்ப நகரம் என 2 கட்டிடங்களை கட்டி நந்தம்பாக்கத்தில் திறந்துள்ளீர்கள். இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்காது.
அமைச்சர் டிஆர்.பி.ராஜா: மிகப் பெரிய அளவில் பின்டெக்ஸ் சிட்டி உருவாகிறது. அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறக்க இருக்கிறார். ஆயிரக்கணக்கான உயர்தர வேலை வாய்ப்புகள் அங்கு கிடைக்கும். தமிழ்நாட்டில் தொழில் புரட்சியை உருவாக்கி வருகிறோம்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி: தேர்தல் வாக்குறுதியில் பலவற்றை நீங்கள் செயல்படுத்தவில்லை. மாமல்லபுரம் துணை நகரம் என்ன ஆனது? சட்டமன்றம் தோறும் விளையாட்டு மைதானம், நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, மாதந்தோறும் மின் கணக்கீடு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு மானியம், காளை மாடு வளர்ப்போருக்கு வளர்ப்புத் தொகை என்று சொன்னதையெல்லாம் செய்தீர்களா?
அமைச்சர் டிஆர்.பி.ராஜா: அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 80 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. எங்களது அடுத்த ஆட்சியில் அனைத்து தொகுதிகளிலும் அது அமையும். திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டால் நேரம் போதாது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி: தாயுமானவர் திட்டம் என்ன ஆனது? சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுமாக உள்ளது. 5 ஆண்டுகளில் எந்த புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. வாக்குபெற வசதியாக ஓரிரு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களின் கனவு திட்டம் என்று ஒன்று உள்ளது. அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது மக்களின் கனவு. இவ்வாறு விவாதம் நடந்தது.
