மோடியையே மிஞ்சுட்டாரு… துரோகின்னு சொல்லிட்டு மைக்கை பிடிச்சிக்குறாங்க… டிடிவியை கலாய்த்த அமைச்சர் சேகர்பாபு

சென்னை: பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் ‘அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை’ இறுதி கட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சென்னை மேயர் பிரியா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் மற்றும் முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் கவுஷிக் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தினக்கூலி, அரசுப் பணியில் இருப்பவர்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு அதிக கட்டணம் மண்டபங்களுக்கு வசூலிப்பதால் சிரமப்படுவதை அறிந்து மண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18ம் தேதி தமிழக முதல்வர் கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் அண்ணா பெயரில் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். சந்திர யோகி சமாதி பகுதியில் அதிகளவில் தினக்கூலி மற்றும் அரசு பணி பார்க்கும் மக்கள் உள்ளனர்.

பொருளாதார ரீதியாக இப்பகுதி மக்களுக்கு இடையூறு இருப்பதை அறிந்து தனியார் மண்டபத்திற்கு இணையாக இந்த மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20.50 கோடி செலவில் ஒரே நேரத்தில் 600 பேர் அமரும் வகையில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரை சூட்ட ஒப்புதல் அளித்திருக்கிறார் முதலமைச்சர்.

வரும் 29ம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார். பிப்ரவரி 28ம் தேதிக்குள் சென்னையில் கட்டப்பட்டு வரும் 8 திருமண மண்டபங்கள்மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும். தைப்பூச விழாவுக்கு இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளோம். பக்தர்களுக்கு உணவு, குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

துரோகி என்று சொல்லிவிட்டு டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்த கேள்விக்கு, ‘பிரதமர் போன்றவர்கள் தினமும் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள். ஆனால், இவர்கள் எப்போதும் மைக் முன்தான் இருக்கிறார்கள். அவர்களிடமே இதுபற்றி கேளுங்கள்’’ என்றார்.

Related Stories: