சென்னை: டிட்வா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை ரூ.1,503.78 கோடி செலவில் மறுசீரமைக்கும் பணிகளுக்காக நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், சமீபத்திய டிட்வா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும் ஏராளமான சாலைகள் சேதமடைந்துள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களின் போதும், சிறப்பு வார்டு சபா கூட்டங்களின்போதும் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைக்கக் கோரி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து சேதமடைந்த நகர்ப்புற சாலைகளை மறுசீரமைக்குமாறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. எனவே, அரசு இந்த கோரிக்கைகளை கவனத்துடன் கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை ரூ.1503.78 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
ஏற்கனவே அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.3,750 கோடி செலவில் புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும் பணிகள் மேற்கொள்ள அரசு ஆணை வெளியிடப்பட்டு பெரும்பாலான சாலைப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
இதுவரை 2025-26ம் ஆண்டில் மட்டும் நகர்ப்புற சாலைகளின் மேம்பாட்டிற்காக ரூ.5,253.78 கோடியை அரசு வழங்கி உள்ளது. இதன் காரணமாக நகர்ப்புற சாலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். சாலைவழி பயணம் எளிதாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
