மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை வசதி உள்ளதா? அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை வசதி உள்ளதா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூரில் குப்பை கொட்ட தடை விதிக்கக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், திடக்கழிவு மேலாண்மை சட்டப்படி, குப்பையை கையாள உரிய வசதிகளை அமைக்க வேண்டும். இந்த வசதிகளை ஏற்படுத்தாததால், திறந்த வெளிகளில் மலைபோல குப்பை கொட்டப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழலுக்கும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் அபாயமானது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்படாத மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளின் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: