தமிழ் இன-மொழி எதிரிகளான பாஜ-அடிமை கூட்டணியை வீழ்த்த உறுதியேற்க வேண்டும்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன-மொழி எதிரிகளான பாஜவையும் அதன் அடிமைக் கூட்டணியையும் வீழ்த்திட உறுதியேற்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழ்மொழியின் மீது இந்தி ஆதிக்கத்தையும், தமிழர்களின் பண்பாட்டின் மீது மதவெறிக் கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களையும் ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து போட்டு வருகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்ற உறுதியுடன், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசும், எனக்கு உறுதுணையாக நிற்கும் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் எதிர்கொண்டு நிற்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து செய்து வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், நிமிர்ந்து நின்று எதிர்க்கும் முதுகெலும்பும் திமுகவிற்கே உண்டு. எதிர்க்கட்சியான அதிமுகவும் அதிலிருந்து உதிர்ந்த இலை-தழை-சருகுகளும் பழைய வழக்குகளின் கோப்புகள் தூசு தட்டப்படும் சத்தம் கேட்டதுமே, பயந்து நடுங்கி, டெல்லிக்கு ஓடி பா.ஜ.வின் பாதம் பணிந்து நின்று விடுகின்றன.

ஒன்றிய பா.ஜ. அரசின் கைப்பாவைகளாகிவிட்ட அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை இன்னும் உள்ள புலனாய்வு அமைப்புகளை வைத்துத் தி.மு.க.வினரையும் முடக்கிவிடலாம் என்கிற சதித்திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் பணிய மாட்டோம். துணிந்து நிற்போம். இனம் – மொழி – நிலம் காத்திடும் போரைத் தொடர்ந்திடுவோம். ‘இப்படியொரு கொள்கைப் பட்டாளம் இந்தியாவில் எந்த இயக்கத்திலும் கிடையாது என்பதை உரக்கச் சொல்லிடும் வகையில், உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

ஜனநாயகப் போர்க்கள வீரர்களான உடன்பிறப்புகளுக்கு ஓய்வில்லை. உங்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள உங்களில் ஒருவனான எனக்கு ஓய்வுமில்லை-உறக்கமுமில்லை. நம் உடன்பிறப்புகள் ஒவ்வொரு குடிமக்களின் ஜனநாயக ஆயுதமான வாக்குரிமையைப் பாதுகாக்கும் பணியையும் களத்தில் நின்று நிறைவேற்றியிருக்கிறார்கள்.

கலைஞர் அடிக்கடி சொன்னதுபோல, நாம் எதிர்கொள்கின்ற 2026 தேர்தல் களம் ஆரிய-திராவிடப் போரின் மற்றொரு களம். அந்தக் களத்தில், திமுகவின் தலைமையில் சமூகநீதி-மதநல்லிணக்கம்-மாநில உரிமைகளை லட்சியமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி வலிமையுடன் களத்தில் நிற்கிறது. தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதி செய்யும் களம்.

போர்க்களம் காணும் படை வீரர்கள் தங்களின் நாட்டைக் காத்திட உறுதியேற்பது வழக்கம். ஜனநாயகக் களம் காணும் திமுகவின் லட்சிய வீரர்களான உடன்பிறப்புகள், ஜனவரி 25 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன – மொழி எதிரிகளான பா.ஜ.வையும் அதன் அடிமைக் கூட்டணியையும் வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்.

உங்களில் ஒருவனான நான், தமிழ்மொழி காத்திடும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளாம் தாளமுத்து – நடராசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்க இருக்கிறேன். அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் உரையாற்றுகிறேன்.

வீரவணக்கத்துடன் தொடங்கும் திமுக உடன்பிறப்புகளின் அணிவகுப்பும் களப்பணியும் 2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெறும் வரை ஓய்வின்றிச் செல்லட்டும். தொய்வின்றித் தொடரட்டும். மகத்தான வெற்றியுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையட்டும். திமுகவின் வெற்றி முழக்கம் எட்டுத் திக்கும் ஒலிக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* எதிர்க்கட்சியான அதிமுகவும் அதிலிருந்து உதிர்ந்த இலை-தழை-சருகுகளும் பழைய வழக்குகளின் கோப்புகள் தூசு தட்டப்படும் சத்தம் கேட்டதுமே, பயந்து நடுங்கி, டெல்லிக்கு ஓடி பா.ஜ.வின் பாதம் பணிந்து நின்று விடுகின்றன.

Related Stories: