நீலகிரியில் உறை பனிக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் 2 நாளுக்கு லேசான மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் நேற்று வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையில் குறைந்த பட்ச வெப்பநிலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால் ஒருசில இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்தும் பிற இடங்களில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

இந்நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதன் தொடர்ச்சியாக நாளையும் இதேநிலை நீடிக்கும். 25ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதன்பிறகு மழை குறைந்து வறண்ட வானிலை நிலவும். இந்நிலையில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு, அதிகாலை நேரங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Related Stories: