சில்லிபாயிண்ட்…

* நார்வே செஸ்சில் பிரக்ஞானந்தா
புதுடெல்லி: செஸ் உலகில் கவுரவம் மிக்கதாக கருதப்படும் நார்வே செஸ் போட்டியில் பங்கேற்பதை தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உறுதி செய்துள்ளார். இதன் மூலம், நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் அவர் மோதுவது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2024ல் நடந்த போட்டியில், பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வியப்பில் ஆழ்த்தினார். அவர், இந்தாண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் டோர்னமென்ட் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். அப்போட்டியில் வெற்றி பெறுபவர், தற்போதைய உலக செஸ் சாம்பியன் குகேஷ் உடன் மோதும் வாய்ப்பு பெறுவார்.

* மகளிர் பிரிமியர் லீக் லிஸெலுக்கு அபராதம்
வதோதரா: மகளிர் பிரிமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி ஆடியபோது, டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் லிஸெல் லீ விதிகளை மீறியதாக அவரது கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒரு தகுதி குறைப்பு புள்ளியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் பிரிமியர் லீக் நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஒன்னுமே தெரியல…லிட்டன் புலம்பல்
டாக்கா: இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்க முடியாது என, வங்கதேச கிரிக்கெட் அணி பிடிவாதம் பிடித்து வருவதால், ஸ்காட்லாந்து அணி, வங்கதேசத்துக்கு பதிலாக இடம்பெறும் வாய்ப்பு உருவாகி வருகிறது. இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணி கேப்டன் லிட்டன் தாஸ் நேற்று கூறுகையில், ‘அடுத்த மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் நாங்கள் ஆடுவோமா என்பது உறுதியாக தெரியவில்லை. அப்போட்டிகளில் எங்களுக்கு எதிராக ஆடப் போவது யார், எந்த நாட்டில் ஆடப் போகிறோம் என்பது தெரிந்தால் உதவியாக இருக்கும்’ என்றார்.

Related Stories: