துபாய்: அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமானது ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டங்களின்போது ஒடுக்குமுறை காரணமாக சுமார் 4029 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 26ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 3786 பேர் போராட்டக்காரர்கள். 180 பேர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள். 28 பேர் குழந்தைகள் மற்றும் 35 பேர் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் இன்னும் பலர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரானில் இந்த கொலைகள் காரணமாக சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றுவதற்காக ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பு திரும்பப் பெறப்பட்டது. கடந்த சில வாரங்களாக ஈரானில் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு இருக்கும் நிலையில் டாவோஸில் ஈரான் அரசை பிரதிநிதித்துவப்படுத்துவது சரியல்ல என்று உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
