திருமலை: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்சுக்கு வழிவிட பணி முடிந்து வீட்டுக்கு கைக்குழந்தையுடன் சென்ற பெண் காவலர் போக்குவரத்தை சீரமைத்தார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு கடந்த 17ம்தேதி காக்கிநாடாவிற்கு வந்தார். அப்போது ரங்கம்பேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலர் ஜெயசாந்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதனால் அவர் தனது கைக்குழந்தையை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தார். பணி முடிந்தபிறகு, தனது வீட்டுக்கு செல்ல குழந்தையை வாங்கிக்கொண்டு புறப்பட்டார். அப்போது காக்கிநாடா-சமர்லகோட்டா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி இல்லாமல் தவித்தது.
இதை பார்த்த ஜெயசாந்தி உடனே தனது குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, போக்குவரத்தை சீரமைத்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினார். இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் இதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
