புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி அவரை பதவியிலிருந்து நீக்க நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை எதிர்க்கட்சி எம்பிக்கள் கொடுத்துள்ளனர். நேற்று முன்தினம் கடும் அமளி காரணமாக மக்களவையில் இந்த தீர்மானம் மீதான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் மக்களவை நேற்று தொடங்கியதும் கேள்வி நேரத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அமளி செய்தனர். இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியதும், சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்வேறு கட்சி எம்பிக்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில் 1954ம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் மாவ்லங்கரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேரு பேசியதை குறிப்பிட்டார். மேலும் கிரண் ரிஜிஜு, ‘‘பிரியங்கா காந்தியை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக்கி இருக்கலாம். குறைந்தபட்சம் அவர் அவைக்கு வருகிறார், விவாதத்தில் பங்கேற்கிறார், சிரித்துக் கொண்டிருக்கிறார்’’ என்றார்.
உடனடியாக குறுக்கிட்ட பிரியங்கா காந்தி, ‘‘இந்த அவையினருக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரவும் பகலும் நேருவை விமர்சிப்பவர்கள், இன்று தங்கள் சொந்த தேவைக்காக அதே நேரு கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்களே என்பதைப் பார்த்து தான் சிரித்தேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை வலுப்படுத்திய நேருவை அவர்கள் திடீரென்று மதிக்கத் தொடங்கி விட்டார்கள். ஒன்றிய பாஜ அரசின் முன் ஒருபோதும் தலைவணங்காத ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது ராகுல் காந்தி தான். மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி இந்த அவையில் எந்த அச்சமும் இல்லாமல் உண்மையை பேசுகிறார். ஆளும் தரப்பில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களால் அந்த உண்மைகளை ஜீரணிக்க முடியவில்லை. அவர்களிடம் பதில் இல்லை. அதனால் கவனத்தை திசை திருப்புவதற்காக தேவையற்ற பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா பேசும்போது,’ 2023 ஆம் ஆண்டில் தவறான குற்றச்சாட்டால் எனது எம்பி பதவி பறிக்கப்பட்டு, தவறாக நான் சபாநாயகர் ஓம் பிர்லாவால் வெளியேற்றப்பட்டேன். இன்று மக்களவை சபாநாயகர் பதவியிலிருந்து ஓம்பிர்லாவை நீக்குவதற்கான தீர்மானத்தை ஆதரித்து நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். இதுதான் தெய்வீக கர்மா’ என்றார். சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே பேசுகையில்,’ ராகுல்காந்தி பேசும்போது 20 முறை குறுக்கிடப்பட்டதாக கவுரவ் கோகாய் கூறினார். நீங்கள் நாட்டிற்கு எதிராகப் பேசினால் 200 முறை குறுக்கிடுவோம் ’ என்றார். பதவி நீக்க தீர்மானம் மீதான விவாதம் இன்றும் தொடரும்.
* கூடுதல் செலவுகளுக்கு ரூ.2.01 லட்சம் கோடி
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2வது துணை மானிய கோரிக்கையை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதன்படி, வரும் மார்ச் 31ம் தேதியுடன் நடப்பு நிதியாண்டு முடியவடைய இருப்பதால் நிகர கூடுதல் செலவினங்களுக்காக ரூ.2.01 லட்சம் கோடி ஒதுக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை ஒன்றிய அரசு நாடுகிறது. இதில் பெரும்பகுதி உணவு மற்றும் உர மானியத்திற்கு ஒதுக்கப்படும்.
* ஜென்டில்மேன் தான் ஆனால்…. டி.ஆர்.பாலு
சபாநாயகர் பதவியில் இருந்து ஓம்பிர்லாவை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்பி டி.ஆர்.பாலு உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பிர்லாவை ஒரு ஜென்டில்மேன் என்று பாராட்டினர். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அவரது கடுமையான நடவடிக்கைகளை குறை கூறினர். சபாநாயகர் மீது தனக்கு மிகுந்த தனிப்பட்ட மரியாதை இருப்பதாக கூறிய டி.ஆர்.பாலு,’அவர் ஒரு நல்ல மனிதர், ஆனால் அவருக்கு என்ன தவறு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் பல எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துள்ளார். ஆனால் அவர் ஏன் இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? சில திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வது நமது கடமை. சபாநாயகர் நியாயமாக செயல்பட வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்’ என்றார்.
