BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDC)ஒன்றிணைக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை!!

மும்பை: BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDC)ஒன்றிணைக்க ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை வழங்கியுள்ளது. அமெரிக்க டாலரின் சார்பை குறைக்க உதவும் இத்திட்டத்தை, நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள BRICS மாநாட்டின் முக்கிய அஜெண்டாவாக சேர்க்குமாறும் ரிசர்வ் வங்கி அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச வர்த்தகத்திற்கும், ரூபாய் மதிப்பை பாதுகாக்கவும் ரிசர்வ் வங்கி, கடந்த 2022 டிசம்பரில் “இ – ரூபி ” என்ற டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டது.

இதுவரை, 70 லட்சம் வாடிக்கையாளர்கள் “இ – ரூபி” – யை வாங்கியுள்ளனர். நாம் பயன்படுத்தும் ரூபாயும், டிஜிட்டல் கரன்சியும் ஒரே மதிப்புடைவையாகும். டிஜிட்டல் கரன்சி நேரடியாக ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படுவதால், சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும், டிஜிட்டல் கரன்சியை பாதிக்காது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி வைத்துள்ளன. இவற்றுள் டிஜிட்டல் யுவனை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, சவுதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு இவ்வாண்டு இறுதியில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரிக்ஸ் நாடுகளின் மத்திய வங்கிகள், தங்களது டிஜிட்டல் கரன்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆலோனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்துக்கு, அமெரிக்க டாலரை சார்ந்திருக்கும் நிலை, வெகுவாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரிக்ஸ் கூட்டமைப்பை அமெரிக்காவுக்கு எதிரான அமைப்பு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்திருந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரை முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: