விருதுநகர் கலைஞர் திடலில் பிப்.7ம் தேதி தென்மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

சென்னை: விருதுநகர் கலைஞர் திடலில் வரும் பிப்ரவரி 7ம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடக்கிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திருவண்ணாமலை, கலைஞர் திடலில், 28 திமுக மாவட்டங்களுக்கு உட்பட்ட 91 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் முதல் பாகம் வரை, வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் என ஒரு லட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து, “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், அகிலமே வியக்கும் வண்ணம் மாபெரும் எழுச்சியோடு “திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு” கடந்த 14.12.2025 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இதை தொடர்ந்து வருகிற 7ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில், விருதுநகர், ‘கலைஞர் திடலில்’ ‘‘தென் மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு’’ நடைபெற உள்ளது. திமுக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சந்திப்பு நடக்கிறது.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா தலைவர்-தாட்கோ, ப.அப்துல்மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், சி.ஆனந்தகுமார் முன்னிலை வகிக்கின்றனர்.

விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கிறார். இதில், தென்மண்டலத்தைச் சேர்ந்த திமுக மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா நன்றி கூறுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: