சென்னை: தங்கம் விலை வாரத்தின் தொடக்க நாளான நேற்று கிடுகிடுவென உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,07,600க்கு விற்பனையாகி புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. இதேபோல, வெள்ளி விலையும் போட்டி போட்டு எகிறியது.
தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது இந்தாண்டும் தொடர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 9ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் உயர்வை நோக்கி பயணித்து வருகிறது. அன்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,400க்கும், 10ம் தேதி பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 3,200க்கும், 12ம் தேதி பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 4960 ரூபாய்க்கும், 13ம் தேதி பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,360க்கும் விற்றது. தொடர்ந்து கடந்த 14ம் தேதி தங்கம் விலை ரூ.1 லட்சத்து 6240 ஆகவும், 15ம் தேதி பவுன் ரூ.1 லட்சத்து 6,320 என அடுத்தடுத்து உயர்ந்து, புதிய உச்சத்தை பதிவு செய்தது. தொடர்ந்து 16ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்து ரூ.1 லட்சத்து 5,840க்கு விற்பனையானது. மறுநாள் 17ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
அன்று ஒரு பவுன் 1 லட்சத்து 6,240 என்று விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளிலேயே தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை தான் சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,450க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,07,600க்கும் விற்றது. இதன் முலம் தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. இதேபோல், நேற்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.318க்கும், கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.3,18,000க்கும் விற்பனையானது. இதுவும் ெவள்ளி விலை வரலாற்றில் புதிய உச்சமாகும்.
