வண்டலூர் பூங்காவில் 18 நாள்களில் 1,20,000 பேர் வருகை: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தகவல்

 

செங்கல்பட்டு: சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் 18 நாள்களில் 1,20,000 பேர் வருகை தந்துள்ளதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் 18ம் தேதி வரை வண்டலூர் பூங்காவுக்கு 1.20 லட்சம் பேர் வருகை தந்து கண்டு களித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் 75 ஆயிரம் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர் என்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் தெரிவித்துள்ளார்.

காணும் பொங்கலை தினத்தையடுத்து மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதனால் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாக சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சிரமமின்றி உயிரியல் பூங்காவை கண்டு மகிழ்ந்தனர்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொங்கல் பண்டிகை நாட்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் வகையில் சுற்றுலாதலமாக அமைந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரை 1.2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் உயிரியல் பூங்காவை கண்டு களித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 75,000 பேர் வருகை புரிந்துள்ளனர்.

பொங்கல் அன்று 14,570 பேரும், மாட்டுப் பொங்கல் அன்று 22,205 பேரும், காணும் பொங்கல் அன்று 26,866 பேரும், 12 ஆயிரம் சிறுவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த ஆண்டு பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

யானை உணவளிப்பு நிகழ்ச்சியும் 7D திரையரங்கம் பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும் சிங்கம் மற்றும் மான் உலாவிட சேவைகள், மின்கல ஊர்தி வாகனங்களில் பூங்கா சுற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டதுடன், அனைத்து விலங்கு இருப்பிடங்களும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டன. இவை அனைத்தும் பார்வையாளர்களிடையே பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளன.

மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பார்வையாளர்களுக்கு வழிகாட்டவும் என்சிசி, என்.எஸ்.எஸ் மற்றும் கல்லூரி மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாம்புகள் கூடம், மீனகம் மற்றும் இரவாடி விலங்குகள் கூடம் போன்ற குறுகிய பாதைகள் உள்ள பகுதிகளில் பார்வையாளர்கள் தன்னார்வலர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி வரிசையில் சென்று பார்வையிட்டனர்.

அதிகமான பார்வையாளர்களின் வருகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உயிரியல் பூங்கா நிர்வாகம் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது. பூங்கா முழுவதும் தகவல் பலகைகள் நிறுவப்பட்டு, வனவிலங்கு பாதுகாப்பு, காற்று மாசுபாட்டை குறைக்கும் வழிகள், நிலையான வாழ்க்கை முறை ஆற்றல் சேமிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான கருத்துகள் விளக்கப்பட்டன. பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக சம்பந்தப்பட்ட துறைகளுன் இணைந்து விரிவான எற்பாடுகள் செய்யப்பட்டன.

இலவச இணையதள வசதியுடன் கூடிய டிஜிட்டல் முறை பூங்கா நுழைவுச்சீட்டு முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்பட்டதால் முழுமையாக டிஜிட்டல் முறையிலேயே பூங்கா நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இருசக்கரம் மற்றும் கனரக வாகனங்களுக்கு தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கிருந்து பூங்கா நுழைவாயிலுக்கு இலவச பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக நுழைவாயிலில் நான்கு மெட்டல் டிடெக்டர்கள் நிறுவப்பட்டு காவல் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 8 வயதுக்கு உட்பட்ட சுமார் 10,500 குழந்தைகளுக்கு பாதுகாப்பு கருதி அடையாள கைவளையங்கள் வழங்கப்பட்டு பெற்றோர் தொடர்பு விவரங்கள் பதி செய்யப்பட்டது.

கூடுதலாக 10 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் 20 பயோ கழிப்பறைகள், உணவு விற்பனை நிலையங்கள் செயல்படுத்தப்பட்டன. ஐந்து மருத்துவ உதவி மையங்கள், ஆம்புலன்ஸ் வசதி, நான்கு உதவி மையங்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு 3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்டது.

சிசிடிவி கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் பார்வையாளர்களின் கூட்ட நெரிசல் கண்காணிக்கப்பட்டு, தேவையான வழிகாட்டல் அறிவறுத்தல்கள் வழங்கப்பட்டன. கூட்ட மேலாண்மை மற்றும் பார்வையாளர் உதவிக்காக 65 வனத்துறை பணியாளர்கள், 100 காவல் துறையினர் மற்றும் 120 என்.சி.சி, என்.எஸ்.எஸ், கல்லூரி மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முக்கிய இடங்களில் தகவல் மற்றும் வழிகாட்டி பலகைகள் நிறுவப்பட்டு பார்வையாளர்களின் அனுபவம் மேலும் மேம்படுத்தப்பட்டது. வாகன நிறுத்துமிடத்திற்கு தனி வெளியேற்ற வாயிலும், தனி பேருந்து நிறுத்தமும் ஏற்படுத்தப்பட்டது. இந்த அனைத்து ஏற்பாடுகளின் மூலம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொங்கல் பண்டிகை நாட்களை பார்வையாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, இனிமையான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக அமைத்துள்ளது. இவ்வாறு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: