வெள்ளம் பாதித்த மாவட்ட பட்டியலில் திருப்பூரை சேர்க்க வேண்டும்

திருப்பூர், ஜன.28:திருப்பூர் மாவட்டத்தை மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் சேர்க்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கலெக்டர் விஜயகார்த்திேகயனுக்கு மனு அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2021 ஜனவரி மாதம் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியலில் திருப்பூர் மாவட்டம் விடுபட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம் வட்டங்களில் நெல் பயிர் விளையும் தருவாயில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் சேதம் ஏற்பட்டு எவ்வித பயனும் இன்றி நாசம் அடைந்துள்ளது.

அதேபோல், ஆண்டுக்கு ஒரு முறை பயிர் செய்யும் கொண்டைக்கடலை, கொத்தமல்லி போன்ற பயிர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தீவனச் சோளம், வெங்காயம் காய்கறி பயிர்கள் சேதமடைந்துள்ளது. ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலும் மானாவாரி தீவன சோளத்தட்டை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் சேதமடைந்தது.இதனால், கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் சேதமடைந்ததால் விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர்.

எனவே, திருப்பூர் மாவட்டத்தை மழை வெள்ளம் பாதித்த மாவட்டமாக தமிழக அரசின் பட்டியலில் சேர்க்கவும், பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: