பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கடற்கரை பகுதிகளில் 3 நாளில் 160 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி தகவல்

 

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்ரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் 2வது நீள கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. வரை உள்ளது. 1880ம் ஆண்டுகளில் ஆளுநர் மவுண்ட் ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரால் இந்த கடற்கரை முதன்முறையாக புதுப்பிக்கப்பட்டது. சென்னை வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு தவறாது வருவது வழக்கம்.

மெரினா கடற்கரை பேருந்துகள், டாக்சிகள், கார் போன்ற வாகனங்கள் மூலம் எளிதில் செல்லும் வகையில் நகர் பகுதியில் உள்ளது. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது கடற்கரையுடன் நடைபயிற்சி செல்லும் எல்லாரும் ஒரு இனிமையான அனுபவத்தை உணருகின்றனர். மாலையில் கடற்கரையில் கலைப்பொருட்கள், கைவினை, இன நகை மற்றும் உணவு பொருட்கள் விற்பனை களைகட்டும். குழந்தைகள் விளையாட சிறந்த இடமாகும். இதேபோன்று, சென்னையில் பெசன்ட்நகர் கடற்கரை, பாலவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளையும் மேம்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னை கடற்கரைகளுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நீலக்கொடி கடற்கரை திட்டத்தின்படி, மெரினா கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படுகிறது. மெரினா முதல் சாந்தோம் கடற்கரை வரையிலான பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளதால் இந்த திட்டத்தின் கீழ் இந்த பகுதிகளில் பாரம்பரியம் சார்ந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கடற்கரைப் பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரிய தாவரங்கள் குறித்தான ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

இதேபோல், சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மற்ற கடற்கரை பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்கள், இயந்திரங்களைக் கொண்டு கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள், எச்சங்கள் உள்ளிட்ட எந்த விதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கடற்கரைப் பகுதிகளுக்கு வருகைதரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது குப்பைக் கழிவுகளை, அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தூய்மையான மெரினா – சுகாதாரமான சென்னை – அனைவரின் பொறுப்பு. இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: