வாரணாசி: தங்கம், வௌ்ளி விலை நாள்தோறும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. அதேசமயம், நகைக்கடைகளில் கொள்ளை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து பீகார் மாநிலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு ஹிஜாப், புர்கா, நிகாப், ஹெல்மெட், ஸ்கார்ஃப் போன்றவற்றை அணிந்து கொண்டு வருபவர்களுக்கு நகை விற்பனை செய்ய அண்மையில் தடை விதிக்கப்பட்டது. தற்போது உத்தரபிரதேச மாநிலத்திலும் இதேபோன்ற அறிவிப்பு வௌியாகி உள்ளது.
இதுகுறித்து உத்தரபிரதேச நகை வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகி கமல் சிங் கூறுகையில், “பல மாவட்டங்களில் நகைக்கடைகளில் நடக்கும் கொள்ளை, திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாப், நிகாப், பர்தா, முக்காடு, ஹெல்மெட் போன்றவற்றை அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம். ஆனால், புர்கா, பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அகற்றி விட்டால் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றார்.
