கிருஷ்ணகிரி: கடந்த 2013 மார்ச் மாதம் நடந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கில், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்பட 12 பேரை விடுதலை செய்து, மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பி.குருபரப்பள்ளியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் மாவட்ட நிர்வாகியாக இருந்தார். கடந்த 2013 மார்ச் 19ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற பாஸ்கர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில், தளி போலீசார் கடத்தல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், மார்ச் 24ம் தேதி, உடல் எரிந்த நிலையில், கர்நாடக மாநிலம் மாலூர் மாவட்ட எல்லையில் பாஸ்கர் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, தளி போலீசார், இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் லகுமய்யா உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி லதா தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார். மேலும், 12 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படாததால், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் உட்பட 12 பேரையும், இந்த கொலை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
