கொடைக்கானல் – கும்பக்கரை இடையே ரோப்கார் அமைக்கும் திட்டம் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வெள்ளக்கெவி கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. எனவே, கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து வெள்ளக்கெவி கிராமத்திற்கு செல்வதற்கும், வெள்ளக்கெவி கிராமத்தில் இருந்து கும்பக்கரை அருவிக்கு செல்வதற்கும் சுமார் 9.3 கிமீ ஆகாய மார்க்கத்தில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நேற்று கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சென்னை மெட்ரோ கார்ப்பரேசன் தொழில்நுட்ப வல்லுநர்கள் நரேந்திரகுமார், கிருஷ்ணன், ரோப்கார் திட்டத்தின் சிறப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் மிட்ரா, கிரிஷ், கொடைக்கானல் ஆர்டிஓ திருநாவுக்கரசு, தாசில்தார் பாபு, சுற்றுலாத்துறை அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து டால்பின் நோஸ் பகுதி வரை வாகனங்கள் மூலம் சென்று ஆய்வு செய்தனர். இதில் 4 இடங்களை தேர்வு செய்து ஆய்வு பணிகளிலும் ஈடுபட இருப்பதாக சென்னை மெட்ரோ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கும்பக்கரை பகுதியில் இருந்து வெள்ளக்கெவி கிராமம் வரையும், பின்னர் கும்பக்கரை மலைக்கிராம பகுதியில் இருந்து வட்டக்கானல் பகுதி வரையிலும், இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் ஏரி அருகே உள்ள பகுதி வரையும் ரோப்கார் திட்டம் செயல்படுத்துவதற்கு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது.

* ஏரிப்பகுதியிலும் ஆய்வு
கொடைக்கானல் நகர் பகுதியில் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் ஆய்வுகள் செய்யப்பட்டன. நகர்ப்பகுதிகளில் இத்திட்டம் அமையும்பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: