கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில், 174 பயனாளிகளுக்கு ரூ.20.98 கோடியில் நலத்திட்ட உதவிகள்

*தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா வழங்கினார்

ஊட்டி : ஊட்டியில் நடந்த கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் 174 பயனாளிகளுக்கு ரூ.20.98 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா வழங்கினார்.‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக ‘கனவுகள் மெய்ப்படும்’ என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

இதன் தொடர்ச்சியாக ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கொறடா ராமச்சந்திரன் பங்கேற்று தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 171 பயனாளிகளுக்கு ரூ.20.94 கோடி மதிப்பில் வங்கிக்கடன் இணைப்புகள், மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு ரூ.4.85 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி என மொத்தம் 174 பயனாளிகளுக்கு ரூ.20.98 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவே பார்த்து வியக்கும் வண்ணம் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அரசின் திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே தன்னார்வலர்கள் மற்றும் அலுவலர்கள் நேரடியாக சென்று அறிந்து கொள்ளும் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 1.92 கோடி மக்கள் தங்களது கனவுகளை வெளிப்படுத்தி உள்ளார்கள். சாதாரண கிராமப்புற பகுதிகள் மட்டுமன்றி நகராட்சி, மாநகராட்சி பகுதிகள் வரை என்னென்ன செய்ய வேண்டும் என எடுத்துரைத்து உள்ளார்கள்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து பயன்பெற வேண்டும்’’ என்றார்.

முன்னதாக 5 ஆண்டு சாதனை புத்தகம் மற்றும் நீலகிரி மாவட்ட ஆவணம் 2030 புத்தகம் ஆகியவற்றை வெளியிட்டார். மேலும் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் விற்பனை கண்காட்சியில் கலந்து கொண்ட ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊட்டி எம்எல்ஏ கணேஷ், கூடுதல் ஆட்சியர் அபிலாஷா கௌர், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயராமன், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, பரிமளம், சுசீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: