பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் சொத்துத் தகராறு காரணமாகத் தந்தை, தங்கை மற்றும் அக்கா மகளைக் கோடாரியால் வெட்டிக் கொலை செய்து கிணற்றில் வீசிய நபரைப் போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே உள்ள லோக்பூர் பிசானி கிராமத்தைச் சேர்ந்த ராம் சிங் (55) என்பவர், தனது 4.5 ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தனது இளைய மகன் முகுந்திற்கு எழுதி வைத்தார். இதனால் மூத்த மகன் முகேஷ் படேல் தந்தை மற்றும் தம்பி மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். சொத்தில் தனக்கு உரிய பங்கு வேண்டும் என்று அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த முகேஷ், கடந்த 2ம் தேதி இரவு கடும் பனி மூட்டத்தைப் பயன்படுத்தித் தனது தந்தையைக் கொல்ல முயன்றார். அதைத் தடுத்த தனது தங்கை சாதனா தேவி (21) மற்றும் அக்கா மகள் ஆஸ்தா (14) ஆகியோரையும் அவர் கோடாரியால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். தடயங்களை மறைப்பதற்காக மூன்று சடலங்களையும் வீட்டின் அருகே இருந்த 20 அடி ஆழமுள்ள கிணற்றில் வீசி, அதன் மீது வைக்கோலைப் போட்டு மூடி வைத்தார். இந்த வெறிச்செயல் அடங்குவதற்குள், அடுத்த நாளான 3ம் தேதி தனது தம்பி முகுந்த் படேலையும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றார்.
இதில் கழுத்தில் குண்டு பாய்ந்து காயமடைந்த முகுந்த் தப்பிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தை மற்றும் உறவினர்களைக் காணவில்லை என முகுந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ட்ரோன் கேமராக்கள் மூலம் கிராமம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் பேரில் முகேஷ் படேலை நேற்று பிடித்துத் துருவித் துருவி விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து வாக்குமூலம் அளித்த முகேஷ், ‘சொத்துத் தகராறில் தந்தையைக் கொலை செய்யும்போது குறுக்கே வந்ததால் தங்கையையும், மருமகளையும் கொன்று கிணற்றில் வீசினேன்’ என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவரது தகவலின் அடிப்படையில் கிணற்றிலிருந்து மூன்று சடலங்களும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. கொலைக்குப் பயன்படுத்திய கோடாரி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்து, அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
