புதுடெல்லி: காசா அமைதி திட்டம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி மூலமாக பிரதமர் மோடியுடன் உரையாடினார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி மூலமாக பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது இரு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் இரு நாட்டு மக்களுக்கும் அமைதி மற்றும் செழிப்பு ஏற்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து காசா அமைதி திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு நெதன்யாகு விளக்கமளித்ததாக தெரிகின்றது. மேலும் இருவரும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இது குறித்து பிரதமர் மோடியின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘பிராந்தியத்தில் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நோக்கிய முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராகவும் தங்களின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை இருவரும் மீண்டும் வலியுறுத்தினார்கள். இந்த அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கான தங்களின் உறுதிப்பாட்டையும் இருவரும் உறுதிப்படுத்தினார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதில் மகிழ்ச்சி. அவருக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். வரும் ஆண்டில் இந்தியா-இஸ்ரேல் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்” என்று கூறினார்.
