புதுடெல்லி: வரும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகளைப் பட்டியலிடும் பணிகள் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையைக் கணக்கிடும் பணி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளும், 2027 பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும் நடைபெறும். வீடுகளை கணக்கெடுக்கும் பணி வரும் ஏப் 1 முதல் செப்.30 வரை நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தால் குறிப்பிடப்பட்ட 30 நாள் காலப்பகுதியில் இந்த கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளைப் பட்டியலிடும் பணிகள் தொடங்குவதற்குச் சற்று முன்பு, 15 நாட்கள் சுயமாகத் தகவல்களைப் பதிவு செய்வதற்கான ஒரு விருப்பமும் வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்டிடங்கள், வீடுகள் மற்றும் குடும்பங்கள் பட்டியலிடப்பட உள்ளன என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார்.
