புதுடெல்லி: டெல்லியில் நள்ளிரவில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பழைய டெல்லியின் துர்க்மான் கேட் பகுதியில் உள்ள பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற டெல்லி மாநகராட்சி நிர்வாகம் (எம்.சி.டி) நடவடிக்கை எடுத்தது.
பைஸ்-இ-இலாஹி மசூதிக்கு அருகில் உள்ள ராம்லீலா மைதானம் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த திருமண மண்டபம் மற்றும் தனியார் மருத்துவ மையம் உள்ளிட்ட சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 1 மணியளவில் சுமார் 30 புல்டோசர்கள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்றனர். மசூதி அமைந்துள்ள 0.195 ஏக்கர் நிலத்தைத் தவிர்த்து, சுமார் 38 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இருந்த மற்ற ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நள்ளிரவில் இடித்து தள்ளப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியதும், அங்கு திரண்ட சுமார் 200க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் அங்கிருந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் போலீஸ் மற்றும் அதிகாரிகள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். இந்த வன்முறையில் 5 காவலர்கள் காயமடைந்தனர். நிலைமை விபரீதமானதால், கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரக்காரர்களை விரட்டியடித்தனர். மேலும் விரைவு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு சிறுவன் பிடிக்கப்பட்டான். 10 முதல் 15 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
