திருமலை: இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மார்ச் 3ல் நிகழ்கிறது. அன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் 10 மணி நேரம் மூடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி-திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் 3ம்தேதி நிகழ்கிறது. அன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் 10 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட உள்ளது. சந்திர கிரகணம் மார்ச் 3ம்தேதி பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும். எனவே கிரகணத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு கோயில் கதவுகளை மூடுவது வழக்கம்.
அவ்வாறு கிரகணத்தன்று காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இரவு 8.30 மணிக்கு பிறகு சுத்தம் செய்த பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சந்திர கிரகணத்தை முன்னிட்டு, அஷ்டதள பத்மாராதன சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4.79 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 85,179 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 18,831 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.79 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. இதில் உள்ள பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

