ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த அஜய் முர்டியா என்பவர் அளித்த புகாரின் பேரில், திரைப்படத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக பாலிவுட் இயக்குனர் விக்ரம் பட் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தை மீறியது மட்டுமின்றி, போலி ரசீதுகள் மூலம் பணம் கையாடல் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், தன் மீதான முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) ரத்து செய்யக் கோரி விக்ரம் பட் தாக்கல் செய்த மனு, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சமீர் ஜெயின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இது வெறும் ஒப்பந்த மீறல் அல்லது சிவில் தகராறு தொடர்பான வழக்கு மட்டுமல்ல; போலி ரசீதுகள் மூலம் நிதியைத் திட்டமிட்டுச் சுழற்சி செய்ததற்கான ஆதாரங்கள் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று கடுமையாகக் குறிப்பிட்டார். குற்றம் நடந்ததற்கான அடிப்படை முகாந்திரம் இருக்கும்போது நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, விக்ரம் பட்டின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, விசாரணையைத் தொடர உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
