- யூனியன் பிஜேபி
- அமைச்சர்
- சிவபுரி
- மத்திய அமைச்சர்
- ஜோதிராதித்ய சிந்தியா
- மகா ஆர்யமான்
- மத்தியப் பிரதேசம்
- யூனியன்
- சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்
- ஜோதிராதித்ய சிந்தியாவின்…
சிவபுரி: மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது கார் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மகா ஆர்யமன் நெஞ்சில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மகா ஆர்யமன் சிந்தியா. மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். சிவபுரி மாவட்டத்தில் நடைபெறும் இளைஞர் மாநாடு மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அங்குச் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று சிவபுரி பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் மகா ஆர்யமன் கலந்து கொண்டார்.
காரின் மேற்கூரையில் உள்ள சன்ரூப் வழியாக வெளியே எழுந்து நின்று, சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்களை நோக்கி உற்சாகமாகத் கையசைத்தவாறு அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசல் காரணமாகக் காரின் ஓட்டுநர் திடீரென ‘சடன் பிரேக்’ பிடித்தார். இதில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய மகா ஆர்யமன், சன்ரூப் விளிம்பில் பலமாக மோதினார். இதில் அவரது நெஞ்சுப் பகுதியில் பலத்த அடிபட்டது. முதலில் வலியைப் பொருட்படுத்தாமல் பயணத்தைத் தொடர்ந்த அவருக்கு, பிச்சோர் நகரை அடைந்ததும் நெஞ்சு வலி அதிகரித்தது. உடனடியாக அவரது பாதுகாப்புப் படையினர் வாகனத்தைத் திருப்பி சிவபுரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு இசிஜி, எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்குத் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது. சுமார் 40 நிமிடங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவர், பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘மருத்துவர்களின் ஆலோசனைப்படி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அவர் ஓய்வெடுத்து வருகிறார்; பயப்படும்படியாகத் தீவிர காயம் ஏதுமில்லை’ என்று தெரிவித்தனர்.
