திருமலை: வாகன சோதனையின்போது பறிமுதல் செய்த ஆட்டோவை தராவிட்டால் பாம்பை விட்டுவிடுவேன் என்று போலீசாரை, ஆட்டோ டிரைவர் மிரட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சந்திராயன்கட்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ உள்பட அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா? போதையில் வாகனங்களை ஓட்டுகிறார்களா? என்று தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு ஆட்ேடா டிரைவரிடம் மது சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் அதிகளவில் மது குடித்துவிட்டு ஆட்டோவை ஓட்டி வந்தது தெரிந்தது. இதனால் அவரது ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து போலீஸ் நிலையத்திற்கு பையுடன் குடிபோதையில் சென்ற ஆட்டோ டிரைவர், எனது ஆட்டோவை விட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் பாம்பை உங்கள் மீது விட்டு கடிக்க வைப்பேன் என்று மிரட்டியபடி போலீசார் மீது வீச முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நாகப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

