சென்னை: சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்” எனும் புதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் காக்கும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது வரவேற்கக்கூடியதே. குறிப்பாக மாநில அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பதையும், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியும் வழங்கப்படும் என்பதையும் அரசு ஊழியர்கள் வரவேற்று மகிழ்கின்றனர்.
அதேசமயம் நிதிக்குழு பரிந்துரையின்படி ஊதியம் உயர்த்தப்படுவதைப் போல ஓய்வூதியமும் உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் நிதிக்குழு அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பலன் பெற முடியும். இதனை முதல்வர் கவனத்தில் கொண்டு வரும் சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்க வேண்டும். விடுபட்ட கோரிக்கைகள் நிறைவேற்றவும், நிரந்தர பணியில் இல்லாத ஊழியர்கள் அனைவரின் நலன் காக்கும் அறிவிப்புகளை முதல்வர் வெளியிடவும் வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: ஒன்றிய பாஜ அரசு தமிழகத்திற்கு உரிய நிதிப்பங்கீட்டை வழங்காமல் வஞ்சித்து வருகின்ற போதிலும், அரசுக்கு கடும் நிதிச்சுமை உள்ள நிலையிலும் பயன் வரையறுக்கப்பட்ட, பணிக்கொடை, அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட ”உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை உடனே அமலாக்கக் கூடிய விதத்தில் அரசாணையை வெளியிட வேண்டுமெனவும், சாலை பணியாளர் பணி வரன்முறை, சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர் போன்ற அடித்தட்டு மக்களின் காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு கோரிக்கைகள், ஆசிரியர், கல்லூரி ஆசிரியர் உள்ளிட்ட பகுதியினரின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட அரசு ஊழியர்-ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: கடுமையான நிதி நெருக்கடி நிலவும் சூழலிலும் ஒன்றிய அரசின் பணியாளர் விரோத கொள்கை நிர்பந்தங்களையும் எதிர்கொள்வதில் உறுதியான நிலை எடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்பது என்று முடிவு எடுத்து தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமலாக்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியம் என்பது அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய சமூக பாதுகாப்பு என்பதை உறுதி செய்து, அதன் சமூக நீதிக் கொள்கையை மீண்டும் உறுதியுடன் செயல்படுத்தியுள்ளது. நாட்டுக்கு முன்னுதாரணமாக அமையும் சிறப்பான நடவடிக்கைக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.
மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” செயல்படுத்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஊழியர்களின் மீது அரசு எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறது என்பதை காட்டுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச் சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் மீது தமிழ்நாடு முதல்வர் வைத்திருக்கும் பேரன்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
