காக்லியாரி: சீரி ஏ கால்பந்து போட்டியில் நேற்று, ஏசி மிலன் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் காக்லியாரி அணியை வெற்றி கண்டது. இத்தாலியின் காக்லியாரி நகரில் யூனிபோல் டொமஸ் விளையாட்டரங்கில் நேற்று நடந்த போட்டியில் ஏசி மிலன்- காக்லியாரி அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் போட முனைப்பு காட்டியபோதிலும், கோல்கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டதால் முதல் பாதியில் ஒரு கோல் கூட விழவில்லை. அதனால் யாருக்கு வெற்றி என்ற சஸ்பென்ஸ் நீடித்ததால் போட்டி சுவாரசியமாக நீண்டது.
அந்நிலையில் 2வது பாதியில் போட்டியின் 50வது நிமிடத்தில் மிலன் அணியின் ரபேல் லியாவோ தனது அணிக்காக முதல் கோல் போட்டு அசத்தினார். அதன் பின் இரு அணி வீரர்களாலும் வேறு கோல் எதுவும் போட முடியவில்லை. அதனால், மிலன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. மிலன் அணி, சீரி ஏ கால்பந்து தொடரில் 17 போட்டிகளில் ஆடி 11ல் வெற்றி, 5ல் டிரா மற்றும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து, 38 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்டர் மிலன் அணி 36 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், நேபோலி அணி 34 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.
