2025ம் ஆண்டு வேலை வாய்ப்பை அதிகரிக்க 11809 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கைகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: 2025ம் ஆண்டு 20471 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9770 தேர்வர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க 11809 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

2025ம் ஆண்டு 1007 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 761 குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2025ம் ஆண்டு கலந்தாய்வின் போது காலிப்பணியிடங்களின் விவரங்களை தேர்வர்கள் இணையவழியில் அறிந்து கொள்ளும் வகையில் தேர்வாணையத்தின் யுடியூப் சேனல் மூலமாக நேரலையாக ஒளிபரப்பும் நடைமுறையும், கணினிவழி மூலம் நடைபெறும் தேர்வுகளில் தேர்வர்கள் தங்களது விடைத்தாளை உத்தேச விடைகள் வெளியிடும்போது தேர்வாணைய இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வு நடைமுறைகளில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் விதமாக 2025ம் ஆண்டு அரசுத் துறைகளிடமிருந்து காலிப்பணியிட விவரங்களை இணையவழியில் பெறும் நடைமுறையும், தேர்வர்கள் தேர்வுக் கட்டணங்களை யூபிஐ மூலம் செலுத்தும் வசதியும், தேர்வர்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இணையவழியில் மனுக்களை சமர்ப்பிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தி கொள்வதற்காக 2026ம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக மூன்றாவது ஆண்டாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி I,II, IIA மற்றும் IV பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நேர்முகத்தேர்வு பதவிகள், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள், பட்டயப்படிப்பு, தொழிற்பயிற்சி நிலை ஆகியவைகளுக்கான அறிவிக்கைகள் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ளன. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அறிவிப் பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: