உயர் நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரிந்த 21 தெருநாய்கள் பிடிபட்டன: மாநராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான தெருநாய்கள் உள்ளன. நாய்கள் சுற்றித்திரிவதால் யாரையாவது கடித்து விடும் நிலை உள்ளது. மேலும் வராண்டாக்களையும் அசுத்தம் செய்து வந்தன. இந்த நாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு பல வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், நீதிமன்ற வளாகங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அகற்றி அவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த அடிப்படையில் கடந்த மாதம் 12ம் தேதி உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பு குழு மற்றும் கட்டிட குழுக்களின் ஒருங்கிணைந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அவற்றை பாதுகாப்பான பராமரிப்பு இடங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 18ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், உயர் நீதிமன்றத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்றுமாறும் அந்த நாய்களை பாதுகாப்பான இடத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்றும் அவற்றுக்கு தேவையான உணவு வழங்க வேண்டும், கொடுமைப்படுத்த கூடாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, ெசன்னை மாநகராட்சி ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திருந்த 21 தெருநாய்களை பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது, விலங்குகள் ஆர்வலர்கள் சிலர் பிடிக்கப்பட்ட அந்த நாய்களை தத்தெடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பிடிக்கப்பட்ட நாய்களை 18 தன்னார்வலர்கள் தத்தெடுத்து சென்றனர். இதனால், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீண்டகாலமாக இருந்த நாய்கள் தொல்லை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: