கன்னியாகுமரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்து உள்ளார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வரும் 4ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சிக்கு வந்து புதுக்கோட்டையில் நடைபெறும் தமிழனின் தலைநிமிர் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், அங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்புகிறார். அமித்ஷா வருகை தமிழகத்தில் மிகப்பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் போதை பொருட்கள், வட மாநிலத்தவர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இதுவரை முடிவு செய்யவில்லை. தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நடிகர் விஜய்யை பாஜ கூட்டணிக்கு அழைப்பீர்களா என்ற நிருபர்கள் கேட்டதற்கு, ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று பதிலளித்தார்.
* ‘ஓபிஎஸ் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம்’
நெல்லையில் நயினார் அளித்த பேட்டி: பொங்கல் பண்டிகைக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அதிமுகவில் ஓபிஎஸ் இணைவது குறித்த தகவலை வரவேற்கிறேன். இருவரும் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்துக்கு தீபாவளி கொண்டாட வேண்டாம் என தனது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களால் அவரும் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என தோன்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
