சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் புத்தாண்டை முன்னிட்டு, தொண்டர்களை நேரில் சந்தித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டி: எங்களுடைய நிர்வாகிகள், தொண்டர்களை ஆலோசித்து கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம். அமித்ஷாவின் வருகையையொட்டி எங்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. பாஜவிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை.
அரசு போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு என்பதும் சேர்க்கப்பட வேண்டும். 2026ல் தமிழ்நாட்டுக்கு ஒரு மாற்றம் வரும். இதுவரை தமிழ்நாடு கண்டிராத தேர்தல் வெற்றியாக 2026 தேர்தல் இருக்கும். நிச்சயம் கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்பு இருக்கிறது. மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது தமிழ்நாடு மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் 5ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
