சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறல்கள் கட்டுப்படுத்துவதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: புத்தாண்டு தினத்தன்று சென்னை நகரின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஜனவரி 1ம் தேதி அதிகாலை 4 மணி வரை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
400 காவல் அதிகாரிகள் மற்றும் 1600 போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, விபத்துகளைத் தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகம், கவனக்குறைவான மற்றும் அபாயகரமான வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வாகன சோதனை சாவடி 153, தற்காலிக போலீஸ் கூடாரங்கள் (விழிப்புணர்வுக்காக) 79, ஆம்புலன்ஸ் சேவை 93, மூடப்பட்ட மேம்பாலங்கள் 22, எல்இடி தடுப்புகள் 38 அமைக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு, அதிநவீன டேப்லெட்டுகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு, போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தனது தொடர்ச்சியான முயற்சிகள், இடைவிடாத கண்காணிப்பு மற்றும் முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடந்து கொள்வதை உறுதி செய்துள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னை மாநகரத்தில் விபத்தினால் எந்தவித உயிரிழப்பும் நிகழவில்லை.
