புதுடெல்லி: மக்களவையும், மாநிலங்களவையும் இந்த ஆண்டு மசோதாக்களை விவாதித்து நிறைவேற்றுவது உள்ளிட்ட சட்டமியற்றும் பணிகளுக்காக தங்களின் நேரத்தில் 30 சதவீதத்திற்கும் குறைவான நேரத்தையே செலவிட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்த ஆய்வறிக்கை முடிவுகளை பிஆர்எஸ் லெஜிஸ்லேட்டிவ் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி நேரம், திட்டமிட்ட நேரத்தை விட குறைந்த நேரமே நடந்துள்ளது. மக்களவையில் கேள்வி நேரம் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாநிலங்களவையில் பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெறும்.
* மசோதாக்களை விவாதித்து நிறைவேற்றுவது உள்ளிட்ட சட்டமியற்றும் பணிகளுக்காக 30 சதவீதத்திற்கும் குறைவான நேரம் செலவிடப்பட்டது.
* 2025ல் நாடாளுமன்றத்தில் 31 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், 100 நாள் வேலை திட்டத்திற்கு பதிலாக விபி-ஜி ராம் ஜி எனும் புதிய தேசிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா, வக்பு சொத்துக்களுக்கான விதிமுறைகளை திருத்தம் மசோதா, ஆன்லைன் பண விளையாட்டுகள் மற்றும் அது தொடர்பான சேவைகள் தடை செய்யும் மசோதா, அணுசக்தி மற்றும் காப்பீடு துறைகளில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, வருமான வரி சட்டங்களை எளிமையாக்கும் மசோதா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
* 18வது மக்களவையின் பதவிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் 42 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 26 சதவீதம் அல்லது 11 மசோதாக்கள் விரிவான ஆய்விற்காக நாடாளுமன்றக் குழுக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு மசோதா மட்டும் துறை சார்ந்த நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
* மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான 2 மசோதாக்களும், தடுப்புக் காவலில் உள்ள அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான 3 மசோதாக்களும் கூட்டுக் குழுக்களால் ஆராயப்பட்டு வருகின்றன.
