×

கட்டணம் நிர்ணயித்து சிறப்பு அனுமதி வழங்கிய அரசு; பாஜ கூட்டணி ஆளும் புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை : சரக்கு சிட்டியில் விடியவிடிய கும்மாளம்

புதுச்சேரி: பாஜ கூட்டணி ஆளும் புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்ய அம்மாநில அரசு சிறப்பு அனுமதி வழங்கியதால் விடியவிடிய மதுபானம் விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.  புதுச்சேரி என்றாலே ஞாபகத்துக்கு வருவது என்றால் மதுபானம் தான். பிரெஞ்சு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு சிலர் இங்கு வசிப்பதால் உலகத்தில் எந்த மூலையில் மதுபானம் தயாரித்தாலும் புதுச்சேரி நகரத்துக்கு அது விற்பனைக்கு வந்துவிடும்.

பீர், பிராந்தி, விஸ்கி, ஒயின், ரம் என இதில் அனைத்து வகை மதுபானங்களும் இங்கு கிடைக்கும். தற்போது புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜ கூட்டணி அரசு, வீதிக்கு வீதி ரெஸ்டோ பார்கள், பப்பு ஆகியவற்றை திறந்து உள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் இதனை திறந்ததால் பொதுமக்கள் வீதிக்கு வந்தே போராடினார்கள். மதுகடைகளை முற்றிலுமாக எதிர்ப்பதாக கூறி வரும் பாஜக, அதன் கட்சி ஆளும் மாநிலங்கள்தான் அதிக மதுபான வியாபாரத்தை செய்து வருகிறது.

நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்திரப்பிரதேசம் தான், மதுபான விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. அங்கு யோகி முதல்வரான பின் புதிதாக 2,706 கடைகள் திறக்கப்பட்டன. ஆண்டுக்கு அங்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. இதேபோல், பாஜ ஆளும் 17 மாநிலங்களில் (மதுவிலக்கு உள்ள ஒரு சில மாநிலங்களை தவிர) மதுவிற்பனை படுஜோராக நடக்கிறது.

கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிரா, அரியானா, உத்தரகாண்ட், அசாம், அருணாச்சல் பிரதேசம், கோவா, மேகாலயா, மத்திய பிரதேசம் என பாஜக அரசுகள் ஆளும் மாநிலங்களில் மட்டும், மதுவிற்பனை மூலம் ரூ.1 லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுபான கடைகள் கட்டணம் செலுத்தி 1 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதால் குடிமகன்கள் விடிய, விடிய குடித்துவிட்டு ஆட்டம் போட்டனர்.

ஆங்கில புத்தாண்டு புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி இங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள், ரெஸ்டோ பார்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக தனியார் ஓட்டல்களில் ஆட்டம், பாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்தனர். அவர்களை ஈர்க்கும் வகையில் அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மதுபான கடைகள் வழக்கமாக காலை 8 முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட்டது. வழக்கம்போல் இந்தாண்டும் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக்கும் வகையில் மதுபான கடைகளை கூடுதல் நேரம் திறந்திருக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ.10 ஆயிரம் கட்டணமாக செலுத்திய சில்லரை, மொத்த விற்பனை மதுபான கடைகள் இரவு 11 முதல் 11.30 மணி வரை கூடுதல் நேரம் இயங்கின. மதுபார்களுடன் செயல்படும் மதுபான கடைகள் ரூ.20 ஆயிரம் கட்டணமாக செலுத்தி இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட்டது.

சுற்றுலா பிரிவு (ரெஸ்டோ, ஓட்டல்களுடன் இணைந்த மது பார்களுக்கு) ரூ.10 ஆயிரமும், ரூ.30 ஆயிரம் கட்டணம் செலுத்தி ஓட்டல்களில் சிறப்பு அனுமதி பெற்று மது விருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது. விடிய, விடிய மது ஆறாக ஓடியதோடு கடற்கரை சாலையில் 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து வெளியேறிய இளைஞர்கள், ஒயிட்-டவுனையொட்டிய பகுதிகளில் வீடுகள், தெருக்கள் சந்திப்புகளில் குடித்து கும்மாளமிட்டனர்.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சீனியர் எஸ்பி கலைவாணன் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான போலீசார், அங்கு ரகளையில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags : BJP ,Puducherry ,Goods City ,New Year's Eve ,
× RELATED ஒடிசாவில் கூடுதல் தாசில்தாரிடம் அரை கிலோ தங்கம் சிக்கியது