ஊட்டி: முதல் சீசனுக்கு பூங்கா தயர் செய்யும் பணிகள் துவங்கியுள்ள நிலையில், நடவு பணிகளுக்காக 35 ஆயிரம் தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில், ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை காண வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். எனவே, மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் டிசம்பர் மாதம் முதல் துவக்கப்படும். ஆறு மாதத்திற்கு பின் பூக்கும் தாவரங்கள் டிசம்பர் மாதம் முதல் நடவு செய்யப்படும். அதன்பின், படிப்படியாக மலர் செடிகள் பூக்கும் காலத்தை பொறுத்து பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்படும். தற்போது பூங்காவில் உள்ள 35 ஆயிரம் மலர் தொட்டிகளிலும் நாற்று நடவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.
இதற்காக, பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் உரம் கலந்த மண் கொட்டப்பட்டு தொட்டிகளை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள ஊழியர்கள் தற்போது தொட்டிகளை தயார் செய்து, அதில் நாற்று நடவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகள் பனியில் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட தொட்டிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
