×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் பால்சம் மலர் அலங்காரம்

ஊட்டி, டிச. 30: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பால்சம் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகளில் மலர்கள் பூத்து காணப்படும்.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வாடிக்கை. குறிப்பாக, கோடை காலங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்கா தயார் செய்யப்படும். இந்நிலையில், கோடை சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டது. தற்போது விதைப்பு பணிகள் மற்றும் நாற்று உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூங்காவில் மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதேசமயம், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மட்டும் தொட்டிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பால்சம், பிகோனியோ, சைக்ளோமென் போன்ற மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மலர்களே இல்லாத பூங்காவில், கண்ணாடி மாளிகையில் உள்ள மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பெரணி செடிகள், கள்ளிச் செடிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். வரும் ஏப்ரல் மாதம் வரை ஊட்டி தாவரவியல் பூங்கா பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மலர்களை காண முடியாத நிலையில், கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரம் மட்டுமே சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது

Tags : Ooty Botanical Garden ,Ooty ,Nilgiris district ,
× RELATED சூதாடிய 8 பேர் கைது