பாலக்காடு, டிச.25: பாலக்காடு மாவட்டம் நெம்மாரா ஊராட்சிக்குட்பட்ட நெல்லியாம்பதி மலையடிவாரத்தில் வசித்து வருபவர் சசி. இவரது வீட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த சிறுத்தையைப் பார்த்த வளர்ப்பு நாய் குறைத்துள்ளது. தொடர்ந்து சிறுத்தை வளர்ப்பு நாயை கடித்து குதறியபோது லாவகமாக சிறுத்தையிடமிருந்து வளர்ப்பு நாய் தப்பியோடியது. மறுநாள் காலை வளர்ப்பு கூண்டில் ரத்தக்காயத்துடன் கிடந்தது.
இதனால் சந்தேகமடைந்த சசி, தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியின் காட்சிகளை பார்வையிட்டதில் சிறுத்தையிடம் போராடி காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில் நெம்மாரா மற்றும் கொல்லங்கோடு வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டதில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என தெரியவந்தது. இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலானதை தொடர்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
