×

பிளாஸ்டிக் வரவால் அழிவின் விளிம்பில் போகி மேளம் தயாரிப்பு தொழில்: தொழிலாளர்கள் வேதனை

 

காஞ்சிபுரம்: தை மாதம் முதல் நாள் தமிழர் திருநாளாக விமரிசையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன் நாளான மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி வீட்டை சுத்தம் செய்து புதுப்பொலிவுடன் வைத்திருக்க பழைய பொருள்கள் பழைய துணிகளை அதிகாலை தீயிட்டு எரித்து போகி மேளம் அடித்து கொண்டாடி மகிழ்வர்.

அப்போது, அதிகாலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பழைய பொருட்களை தீயில் எரித்து சுற்றி நின்று மேளம் கொட்டி ஓசை எழுப்பி கொண்டாடி மகிழ்வர். சிறு பறை என்றழைக்கப்படும் இந்த போகி மேளம் தயாரிக்கும் பணியில் காஞ்சிபுரம் வெங்கடேசபாளையம் மற்றும் திருக்காலிமேடு அருந்ததி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தயாரிப்பு முறை குறித்து வெங்கடேசபாளையம் பகுதியைச் சேர்ந்த போகி மேளம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவித்ததாவது: போகி மேளம் தயாரிப்பதற்காக சுமார் 4 மாதமாக வேலை செய்வோம். சென்னையில் உள்ள ஆடுதொட்டி பகுதியில் இருந்து தோல் வியாபாரிகளிடம் இருந்து தோல் வாங்கி வந்து, அதில் இருந்து ஜவ்வைப் பிரித்து சுண்ணாம்பு நீரில் மென்மையாகும் வரை ஊற வைத்து சுத்தம் செய்வோம். பின்னர், மண்பாண்டத் தொழிலாளர்களிடம் இருந்து ஓடு வாங்கி, அந்த ஓட்டில் பசையிட்டு தோல் ஒட்டி காய வைக்கப்படும்.

அதன்பின் தோலின் மென்மைக்கு ஏற்றவாறு ஓசை இருக்கும். இந்தத் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் எங்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில் கடன்வாங்கி முதல் போட்டுள்ளோம். கடந்த காலங்களில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த சிறு தொழில் கடனும் தற்போது வழங்குவதில்லை. எனவே, அரசு எங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும், போகிப் பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாடும் வகையில் போகி மேளத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் வரவால், உடுக்கை, டிரம்ப்ஸ் போன்ற பல்வேறு இசைக்கருவிகள் பிளாஸ்டிக்கில் கண்ணைக் கவரும் விதத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் பாரம்பரியமாக போகிப் பண்டிகையை கொண்டாடுவோர் தோலால் செய்யப்பட்ட போகி மேளத்தை தேடி வாங்கிச் செல்கின்றனர். எனவே, அரசும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் இதுபோன்ற போகி மேளம் செய்யும் தொழிலை ஊக்குவிக்கும் விதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Bogi ,Melam ,Kanchipuram ,Thai month ,festival ,Pongal ,Margazhi month ,Pongal festival ,Bogi festival ,
× RELATED மதுராந்தகத்தில் சொகுசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து